Sunday, January 8, 2023

மேற்படிப்பு by Veena Shankar

 


மேற்படிப்பு 


                                                    திருமணத்திற்கு முன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த புவனாவிற்கு மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருந்தது. பிறந்த வீட்டில் இவளோடு சேர்த்து ஆறு பேர் என்பதால் மேலே படிக்க வைக்க முடியாமல் எல்லோரும் சொற்ப படிப்பு தான் படித்து இருந்தார்கள். புகுந்த வீட்டிலாவது தன் ஆசை நிறைவேற வேண்டும் என நினைத்து தான் அந்த திடீர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாள் புவனா.


                                                 தன் கணவன் கேசவனை கரம் பிடித்தாள். கேசவனின் அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் இவர்களுடைய திருமணம் நடந்தது. அவனுடைய அப்பா அரசு பணியின் போது இறந்ததால் அப்பாவின் வேலை கேசவனுக்கு கிடைத்தது. புவனாவை ஒரு போதும் அவள் மாமியார் கடிந்து கொண்டது இல்லை. கேசவனின் அம்மா இறந்து விட்டதால் அவனுடைய அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சித்தி யானவள் என்றும் முதல் தாரத்து பிள்ளையை கொடுமைப்படுத்துபவள் என்பது இங்கே பொய்யானது. பதிலாக கேசவன் தான் தன் சித்தியை கொடுமைப்படுத்தினான். குழந்தைகள் இல்லாததால் கேசவனின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தாள் சித்தி. 


                                       திருமணமாகி ஆறு மாதங்கள் சென்ற நிலையில் மெதுவாக தான் படிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை கேசவனிடம் புவனா தெரிவிக்க, வீடு ரணகளபட்டு போனது. அப்போது தான் புவனாவுக்கு கேசவனின் சுயரூபம் தெரிந்தது. மாமியாரும் மகனுக்கு அடங்கிப் போகும் விஷயம் புரிந்தது. தன் மேற்படிப்பிற்காக குழந்தை பிறப்பைத் தள்ளிப்போட வேண்டும் என்று சொன்னதும் அவளை வலுக்கட்டாயமாக கர்ப்பமாக்கினான். கணவனை நினைத்து அழுவதா இல்லை குழந்தை பிறக்கப் போகிறது என்பதற்கு சந்தோசப்படுவதா என விடை தெரியாமலேயே புவனா, தன் முதல் குழந்தை மதுவை பெற்றெடுத்தாள். கேசவன் தன்னை வெறுப்பதற்கான காரணம் தெரியாமலேயே அவனோடு குடும்பம் நடத்தினாள். இதற்கிடையே கேசவனின் சித்தி இறந்தாள். 


                                         வருடங்கள் பல ஓடின. வீட்டிற்கு காசு கொடுக்காமல் குடிகாரனாக மாறியதோடு மட்டுமல்லாமல் வேறொரு பெண்ணிடம் சகவாசம் வைத்திருந்தான் கேசவன். இதைப் பற்றி தெருக்காரர்கள் அரசல் புரசலாக பேச, இது புவனாவின் காதுக்கு எட்டியது. எதிர்த்து கேட்டவளுக்கு பதில் அடி உதை தான். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மதுவாவது தனக்கு ஆதரவாக இருப்பாள் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தன் அப்பாவின் செயலை கண்டிக்காமல் விஷயம் தெரிந்திருந்தாலும் புரியாதவளாய் கேசவவனோடு சேர்ந்து, புவனாவை படிக்காதவள், ஒன்றும் தெரியாதவள் என ஏளனம் செய்தாள் மது. பெற்ற பெண்ணே இப்படி பேசுகிறாளே என்று நினைத்து புவனா வேதனைப்பட, அவளுக்கு திருமணப் பருவம் வந்ததும் மதுவுக்கு மாப்பிள்ளை பார்க்க, அதை நிராகரித்து தான் ஒருவரை காதலிப்பதாக மது சொல்ல, கேசவனும் மகளின் காதலுக்கு ஆதரவு சொல்ல, வேறு வழியில்லாமல் மதுவின் சந்தோஷத்திற்காக அவள் விருப்பபடி திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாள் புவனா. 


                                                மகளின் திருமணத்திற்கு பின்னும் கேசவனின் ஆட்டம் அடங்கவில்லை. ஆனால் திருமணமான பின் தான் தன் அப்பாவின் செயல் தவறு என புரிந்து கொண்டாள் மது. திருமணமான பின், மணமுடித்த கணவன் தனக்கு மட்டுமே என்று மனைவி நினைப்பதில் தவறில்லை என்று மது உணர்ந்தாள். மனம் திருந்திய அவள் புவனாவிற்கு ஆதரவாக இருந்து கேசவனை எதிர்த்தாள். அவன் செயலை கண்டித்தாள். இதற்கிடையே புவனாவிற்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமாக இருப்பது தெரிய வந்தது. இதைப்பற்றி புவனா யாரிடமும் சொல்லவில்லை. தன்னை பார்க்க வந்த மதுவிடம் இனி தான் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை என்று கூறி, தன்னுடைய அலமாரியில் தான் கைப்பட எழுதிய டைரியை எடுத்து வரச் சொன்னாள் புவனா. அப்போதுதான் புவனாவிற்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது என்று மதுவிற்கு தெரிந்தது. அதை படிக்கும் படி புவனா கூற, மதுவும் படிக்கப் படிக்க கண்களில் கண்ணீர் பெருகியது. தானும் அப்பாவும் சேர்ந்து அம்மாவை இவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கிறோமா என்று நினைத்து வேதனைப்பட்டாள்.  


                                               சிறுவயது முதல் தன் அம்மாவிற்கு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை என்பதை நினைத்து மது வருத்தப்பட, அந்த டைரி குறிப்பு முடிய, அடுத்த டைரியை மது புரட்டிப் பார்த்தாள். அதில் மது பிறந்தவுடன், தான் மேற்படிப்பு படிக்கா விட்டாலும் கேசவனுக்கு தெரியாமல் பல இலவச தொழில்கல்விகளை படித்ததாகவும் புவனா சொல்லியிருந்தாள். படித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் எழுதியிருந்தாள். தன் படிப்பிற்காக தேவைப்பட்ட சொற்ப பணத்தை ஒவ்வொரு முறையும் தன் ரத்தத்தை விற்று படித்ததாக எழுதியிருக்க, மதுவின் கண்கள் தன் அம்மாவை பார்க்க, அதற்குள் புவனா மதுவை பார்த்தபடியே இறந்து போயிருந்தாள்.  


கனவு நிஜமாவது அரிது. அது நிஜமானாலும் அதன் உண்மை வெளிப்படுவது அரிது.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...