Friday, January 6, 2023

படம் பார்த்து சிந்தனையை பதிவிடுங்க by Veena Shankar

 


இவர் நினைத்திருந்தால் தலையில் கட்டியுள்ள துண்டை இடுப்பில் கட்டியிருக்கலாம். மானத்தை விட வறுமை கொடியது என்றுணர்ந்ததால் வயல்வெளியின் வெயிலில் குளிர் காய்கிறார் போல


இடுப்பில் துண்டை கட்டினால் தலைமை பண்பு தலைக்கேறும் என்பதால், தான் தானாகவே இருக்க நினைக்கும் ஓர் ஏழை விவசாயி.


தன் கரம், சிரம் தாழ்த்தி நிலத்தில் உழுவதே தனக்கு கிடைத்த வரம் என்கிறார் இந்த மாமனிதர்


என் நிலத்தை அடுத்தவர் சொந்தம் கொண்டாடவோ என் நிலத்தை துண்டு போட்டு விற்கவோ விடமாட்டேன், வயலே என் வாழ்வாதாரம் என்பதால்


வயல்வெளியில் மறைய இடமில்லை, என் மானத்தை காக்கவும் முடியவில்லை, எழ மனமில்லாமல் மௌனமாகிறேன்


சிறப்பு த் தள்ளுபடியில் விற்ற ஜவுளியில் மிச்சம் இந்த தலைப் பாகை மட்டுமே


அறுவடை செய்த வயலில் அழகான ஓவியம் அதிசியக்க வைக்கிறது


கைகட்டி நில்லுங்கள் என்னிடம், என் உழைப்பிற்கும் அந்த உழைப்பினால் கிடைக்கும் உங்கள் அடுத்த வேளை சோறுக்காகவும்

 அன்னமிட்ட விவசாயி


                                    பெரியசாமி தன் கண்களை அகலமாய் விரித்து, “என்னது! நம்ம வயக்காட்ட விற்கப் போறியா? என்ன சொல்றேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?” என்று தன் மகன் இளஞ்செழியனை பார்த்து கேட்டான். “இவ்வளவு நாள் நீங்களும் விவசாயம் பார்த்தீங்க. இப்போ நீங்க வயக்காட்டுக்கு வரதே இல்ல. நான் ஒருவனே எவ்வளவு வேலை பார்க்க முடியும்?” என புலம்பினான் பெரியசாமியின் இளைய மகன் இளஞ்செழியன். “அதற்காக இந்த முடிவு எடுப்பியா? உனக்கு முடியலைன்னா சொல்லு நான் வேற ஆள வச்சி விவசாயம் பார்த்துக்கிறேன்.” என்று பெரியசாமி சொல்ல, “ஆமா! உங்க மூத்த பையனை மட்டும் நல்லா படிக்க வைத்து அரசாங்க வேலையை வாங்கி கொடுத்துட்டிங்க. அவன் நகரத்திலே நல்ல வசதியா இருக்கிறான். நான் மட்டும் இந்த விவசாயத்தை செஞ்சு கஷ்டப் பண்ணுமா?” என்று தன் இயலாமையை சொன்னான் இளஞ்செழியன். 


                              “ஆமாண்டா! உன்னையும் நல்லா படின்னு சொன்னேன். ஆனா நீ ஊரை சுத்திக்கிட்டு இப்ப வந்து என்னை குறை சொல்ற.” என கேட்டான் பெரியசாமி. மேலும் “இந்த பூமிதாண்டா நமக்கு பொக்கிஷம். இதை வித்து என்ன செய்யப் போகிற?” என்று பெரியசாமி கேட்க, “ ஆமா! நானும் எவ்வளவு தான் மேல மேல காசு போட்டு விவசாயம் பார்க்கிறது? என் பொண்டாட்டி புள்ளைகளை நான் காப்பாற்ற வேண்டாமா?” என இளஞ்செழியன் எதிர்வாதம் செய்ய, “ நானும் உங்க அம்மாவும் இதை வச்சி உங்களை காப்பாற்றவில்லை? எல்லாத்தையும் சந்தோஷமா ஏத்துக்கணும். ஒரு வருஷத்துல உனக்கு கஷ்டமாக இருந்தாலும் மறு வருஷத்துல அந்த காசை சேர்த்து உனக்கு இந்த பூமிதாண்டா தருது” என்று பெரியசாமி சொல்ல, 


                                 “அப்பா! உங்களோட சம்மதத்தை நான் கேட்கலை. இது என் பெயர்ல தான் இருக்கு. மெயின் ரோட்டுக்கு மேலேயே நம்ம நிலம் இருக்கு. அதனால ரொம்ப அதிகமா விலை போகுது. அவர்கள் பிளாட் போட்டு வீடு கட்டினப்புறம் கீழ்தளத்தில் ஒரு வீடு தரதா சொல்லி இருக்காங்க. அது போக மிச்சம் கையில காசு தராங்க. அது காலாகாலத்துக்கும் எனக்கு போதும். பணத்தை பேங்கில் போட்டுட்டு நான் ஏதாவது ஒரு வேலைக்கு போயிடுவேன். பிள்ளைகளை நல்லா படிக்க வச்சுருவேன்” என்று கெத்தாக இளஞ்செழியன் சொல்ல, தான் தன் பெயரில் இருந்த சொத்துக்களை இவனை நம்பி எழுதி கொடுத்தது தவறு என முதன் முறையாக பெரியசாமி உணர்ந்தான்.


                                        பெரியசாமி தன் நிலத்தை நோக்கி விறு விறு என்று நடக்க தொடங்கினான். எம்புட்டு பெரிய இடம் இதைப்போய் விற்கிறானே? கை வைத்து தேய்த்தாலே தண்ணீர் வரும் என்று எண்ணிக் கொண்டே தன் வயலில் விளைந்த பயிரை பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டு இருக்கும் போதே அவன் கண்கள், கண்ணீரை ஓட விட்டு இருந்தன. 


                                         காலையில் எழுந்தவுடன் வயலுக்கு வந்து தண்ணீர் பாய்ச்சி, விதை முதல் கதிர் ஆகும் வரை அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு ரசித்து, கட்டி அணைத்து முத்தமிட்ட பின்னே அதை அறுவடை செய்யவே அனுமதிப்பான் பெரியசாமி. காலம் காலமாக அவனுடைய சிறுவயது முதல் பார்த்த வயல் அல்லவா? அவனுடைய தாத்தா ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு வயல்காட்டில் உழுவதையும் அவனுடைய அப்பா இரு எருதுகளை கட்டி உழுததையும் பார்த்திருக்கிறான். இவனுடைய காலத்தில் டிராக்டர் வாங்கி உழுது இருக்கிறான். 


                                     “ காசு கொடுத்தால் பொருள் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை யாரும் உணர்வதில்லை. எந்த பொருளுக்கும் ஒரு மதிப்பு உண்டு. வயல்காட்டையெல்லாம் வீடாக, கட்டிடமாக மாற்றினால் நாளை நமக்கு உணவு விளைவிக்க ஒரு நிலமும் மிஞ்சாது. அயல்நாட்டிலிருந்து காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். “ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது” என்று பாடத்தில் படிக்கிறார்களே தவிர அதை தொலைநோக்கு பார்வையுடன் பார்க்க மறந்து விடுகிறார்கள்” .என்று பல எண்ணங்கள் பெரியசாமியின் மனதில் வட்டமிட்டன.


                                    இந்த வயக்காட்டை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என முடிவு செய்தவாரே வீட்டிற்கு சென்று, தன் மூத்த பையன் வளவனை அலைபேசியில் அழைத்தான். மறுமுனையில் அவனுடைய குழந்தை அலைபேசியை எடுக்க, அப்பாவிடம் கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டான் பெரியசாமி. அப்படி இப்படி என்று பேசாமல் நேரே விஷயத்துக்கு வந்தான் பெரியசாமி. “ வளவா! நான் உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். நீயும் நன்றாக படித்தாய். இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறாய். எனக்காக நீ ஒரு வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ள, அப்பா என்ன கேட்கப் போகிறார் என்று தெரியாமல் “சொல்லுங்கப்பா!” என்றான்.


                                “உன் தம்பி வயக்காட்ட வித்து வீடு கட்ட போறான். அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன். ஆனாலும் அவன் விடாப்பிடியாக இருக்கிறதனால அந்த வயக்காட்டை விற்றால் எவ்வளவு பணம் வருமோ அந்த பணத்தை அவனிடம் நீ கொடுத்து விடு.” என்று பெரியசாமி சொல்லவும் எதிர்வாதம் ஏதும் செய்யாமல் “சரிப்பா! எப்போ காசு அனுப்பனும்? எவ்வளவு அனுப்பனும்?” என்று மட்டும் கேட்டான் பெரியசாமியின் வளர்ப்பு பிள்ளை வளவன். பெரியசாமிக்கு நன்றாக தெரியும், வளவன் தன்னுடைய பேச்சை மீறி எந்த செயலும் செய்வதில்லை என்று. வளவன், பெரியசாமியின் வளர்ப்பு பிள்ளை என்று இளஞ்செழியனுக்கும் தெரியாது. வளவன் இளஞ்செழியனை அழைக்க, இருவரும் ஏதோ பேசி முடிவுக்கு வர, “நான் உனக்கு இந்த வயக்காட்டை எழுதிக் கொடுக்கிறேன். எனக்கு காசை மட்டும் நீ கொடு” என்று டீலிங் பேசினான் இளஞ்செழியன். அன்னமிட்ட இடத்தை காப்பாற்ற எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது என்று மனதில் நினைத்துக்கொண்டான் பெரியசாமி.


பாசம் என்பது உயிரினங்களுக்கு மட்டும் அல்ல. பலன் கொடுக்கும் அனைத்திற்கும் உண்டு என்பதே அறிய வேண்டிய விஷயம்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...