நடை பயிற்சி
"நானும் நீயும் இதைப்பற்றி பேசி இரண்டு வருடமாகிறது. எப்படியாவது இன்று அந்த காரியத்தை முடித்து விட வேண்டும்" என்று சொன்னாள் கவிதா சுபாவிடம். "ஆமாம். நானும் பார்க்கிறேன், கிழவன் கிழவி கூட இதை விட்டு வைக்கிறது இல்லை. ஒருத்தரை பார்த்து ஒருத்தர் இதை
ஆரம்பிக்கிறார்களே தவிர்த்து யாரும் இதை விடுவதில்லை. என்னதான் மருந்து மாத்திரை போட்டுக் கொண்டாலும் இதுல இருக்கிறது அலாதியான இன்பம் என்று வேற சொல்லி நம்மளை வெறுப்பேத்துறாங்க" என்று சொன்னாள் பதிலுக்கு சுபா.
சாயங்காலம் நாலு மணிக்கு டிபன் ரெடி பண்ணி வைப்பதால் தத்தம் கணவர்கள் வந்து சாப்பிட்டுவிட்டு சென்றால் இவர்களும் நினைத்த காரியத்திற்கு பிள்ளையார் சுழி போடலாம் என நினைத்திருந்தனர்.
சரியாக ஆறு மணிக்கு விளக்கு ஏற்றி தங்களுடைய அன்றைய மாலை வேலைகளை முடித்துவிட்டு தங்கள் அன்றைய தினத்திற்காக பேச்சை துவக்கினர் சுபாவும் கவிதாவும். "சரியா ஒரு வாரம் ஆயிடுச்சு , நம்ம வாக்கிங் போக ஆரம்பிச்சு" என்று பேச்சை ஆரம்பித்தாள் சுபா. "அப்பா ! எப்படி இருக்குல்ல உடம்பு? கொஞ்சம் கனம் குறைந்தது போல இருக்கு" என்று கவிதா சொல்ல, "ஆமா! இத்தனை நாள் நான் வண்டியில போகும்போது இவ்வளவு தூரம் இருக்கா? என மலைச்சுக்கிட்டு இருந்த தூரம் எல்லாம் இப்போ சரியா இருபது நிமிஷத்துல முடிஞ்சு போயிடுது. வண்டி ஓட்டும் போது முன்னாடி போற வண்டியை மட்டும் தான் நம்ம பார்க்கிறோம். வழியில நாம கடந்து போகிற கோயில் கோபுரம் , கடைகளில் இருக்கிற அழகு, தெருக்களில் விற்கும் பொருட்கள் எல்லாம் பார்க்க மறந்து விடுகிறோம்" என்று சொன்னாள் சுபா. " முதல் நாள் நாம் போகும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இரண்டாவது நாளிலிருந்து அதை பழக்கிக்கிட்டோம். பேசிக்கொண்டே போறதுனால அந்த இருபது நிமிட நேர நடை பயணம் நமக்கு பெருசா தெரியல. சரி தானே நான் சொல்றது" என்று கேட்டாள் கவிதா. மேலும் "இந்த எதிர்த்த வீட்டு பத்மா, தன் கூட நாயை கூட்டிக்கிட்டு வாக்கிங் போறதுதாண்டி எனக்கு ரொம்ப பொறுக்கல. அதனால்தான் எப்படியாவது வாக்கிங் கிளம்பிடலாம் என்று முடிவு பண்ணிட்டு உன்னை இங்கே வரச் சொன்னேன்." என்றாள் கவிதா. "எனக்கும் அதுதான் வெறுப்பா இருந்துச்சு. அதான் என் வீட்டுக்காரர் இத்தனை நாளா வாக்கிங் போகலாம் என்று கூப்பிட்டும் நான் கிளம்பல. ஆனா நீ சொன்னதும் கிளம்பிட்டேன்" என்றாள் சுபா. "சரி! எப்படியோ நாம பத்மாவை திட்டினாலும் அவளால தான் நமக்கு வாக்கிங் போகணும் என்ற எண்ணம் தோன்றி இருக்கு. " என்றும் கவிதா சொல்ல, ஆமாம் என்று தலையைசைத்தாள் சுபா. "வாக்கிங் போறதால ரொம்ப ஃப்ரெஷ் இருக்கிறது. நம்ம இனி இதை விடக்கூடாது. வாக்கிங் போகிற அருமை இப்பதான் தெரியுது. அதனால பத்மாவுக்கு ஒரு நன்றி சொல்லணும்" னு சுபா சொல்ல, பத்மாவின் மீதான வெறுப்பை மறந்து இருவரும் சிரித்தனர்.
அடுத்தவரின் வெறுப்பேற்றும் செயலும் நம்மை சிறப்பாக்கும் என்பது நிஜமே.

No comments:
Post a Comment