அவசியம்
“அம்மா! இன்னைக்கு தான் பீஸ் கட்ட கடைசி தேதி” என ரவி சொல்ல, “ என்னடா! இப்ப வந்து சொல்லறே? எங்கிட்ட அவ்வளவு காசு இருக்காதே?” என்று தன் மகனிடம் சொன்னாள் முனியம்மாள். “அன்னைக்கு உன்கிட்ட நான் சொன்னேன்மா. இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல அதுக்குள்ள உனக்கு அந்த பணத்தை தருகிறேன்னு நீ தானே சொன்னே?” என்றான் ரவி. பதிலுக்கு “ஆமாண்டா! இருக்கிற வேலையில அதை மறந்து தொலைத்துவிட்டேன். வேலை செய்ற வீட்டு முதலாளிக்கு உடம்பு சரியில்ல. அதனால அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கு. நீ நேற்று சொல்லி இருந்தாலாவது கொஞ்சம் அவங்ககிட்ட முன் பணம் வாங்கிட்டு வந்திருப்பேன்.” என்று சொன்னாள் முனியம்மா. “அந்த இன்ஸ்டிட்யூட்ல வேற போன் பண்ணி பீஸ் கேட்டுகிட்டே இருக்காங்க. அடுத்த வாரம் புதுசா ஆரம்பிக்கிற கிளாஸ்ல என்னை சேர்த்துக்கிறதா சொன்னாங்க. சரி! பரவாயில்லை. அடுத்த கிளாஸ்ல நான் சேர்ந்துகிறேன். இன்னும் ஆறு மாசம் தானே” என்று அம்மாவை சமாதானப்படுத்தினான் ரவி.
அவன் அப்படி சொன்னதும் முனியம்மாவிற்கு ஏதோ போலாகி விட்டது. தன் கணவன் குடிக்காமல் உயிரோடு இருந்தாலாவது அவளுடைய தாலிக்கொடி மிஞ்சியிருக்கும். படுபாவி! அவன் அற்ப ஆயுசுள இறந்து போய் விட்டதால அவனுக்கு காரியம் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்குற அந்த தாலிக் கொடியும் விற்று விட்டாள் முனியம்மா. கோயிலில் சுவாமிக்கு முன் வரம் கேட்கும் பக்தர்கள் போல தன் மகன் தன் எதிரே நிற்பதை பார்த்து கண்ணீர் வடித்தாள். ஒரு யோசனை தோன்ற பக்கத்து வீட்டில் இருக்கும் நிர்மலாவை கேட்டுப் பார்ப்போம் என்று வெளியே சென்றாள். நிர்மலா வீடு பூட்டி இருந்ததால் வெறும் கையோடு திரும்பியவள், ரவியை அழைத்து தன் அலமாரியில் உள்ள டப்பாக்களை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைத்து, பத்து, ஐம்பது என சேர்த்து வைத்திருந்த புதிய ரூபாய் நோட்டுக்களை ரவியிடம் கொடுத்து கணக்கு பார்க்க சொன்னாள். அப்படி இப்படி என ஒன்பதாயிரம் ரூபாய் சேர ஆயிரம் ரூபாய்க்கு விடை தெரியாமல் விழித்தாள்.
முனியம்மாவுக்கு தாய் வீட்டு சீதனமாக அவள் கல்யாணத்தில் கொடுத்த ஒரு வெண்கலப் பானை இருப்பது நினைவுக்கு வர அதை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்தாள். தன் தாயின் நினைவாக கணவனின் குடிப்பழக்கத்திற்கு பயந்து, மறைத்து வைத்திருந்தாள். அந்த பானையை தற்போது விற்க எண்ணி அடகு கடையை நோக்கி சென்றாள். அங்கேயும் அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடைசியாக யோசித்தவள், தான் வேலை செய்ற வீட்டில் தனக்கு கிடைத்த ஒரு பட்டு புடவையை, முன்பு ஒரு நாள் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் லதாவிடம் காண்பிக்க, அது அவளுக்கு மிகவும் பிடித்துப் போய் இருந்ததால் தனக்கு கொடுக்கும்படி கேட்க, பதிலுக்கு காசு கொடுப்பதாக சொல்லி இருந்தாள். ஆனால் அந்த புடவை இவளுக்கும் பிடித்திருக்க அப்போது கொடுக்க மறுத்த முனியம்மாள், அந்த புடவையை தற்போது லதாவுக்கு விற்க முடிவு செய்தாள். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ரவியின் வங்கி கணக்கில் சேர்ப்பித்து அதை அந்த இன்ஸ்டிட்யூட்டுக்கு கட்டினாள்.
காசு இல்லை என்று சொன்னாலும் தன் அம்மா தனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு பணம் பிரட்டியது நினைத்து பெருமிதப்பட்டான் ரவி. அப்பா இல்லை என்ற குறையை அம்மா தீர்த்ததாக நினைத்தான். இதை நினைக்க நினைக்க ரவியின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. அதை கவனித்த அம்மா முனியம்மாள்,” தம்பி! அழாதே! நான் பணம் இல்லாததால் உயர் படிப்பு படிக்க முடியவில்லை. அந்தக் காலத்தில் இந்த தைரியம் எனக்கு வரவில்லை. இப்போது இருப்பது போல வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் வசதியும் இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் நானும் இன்று பெரிய பதவியில் அமர்ந்திருப்பேன். பணம் இல்லை என்ற காரணத்திற்காக உன் படிப்பு என்றும் நிற்கக் கூடாது. எப்போதும் ஒவ்வொரு டப்பாவிலும் சிறிது சிறிதாக பணம் போட்டு இருந்தேன். அவசர காலத்தில் அது உதவியாக இருக்கும்.” என்று சொன்னாள் .
“ நீங்க மட்டும் இவ்வளவு கஷ்டப்படுறீங்க! நானும் வேலை பார்த்துக்கிட்டே படிக்கிறேன்னு சொன்னபோது ஏன் வேண்டாம் என மறுத்துட்டீங்க? “ என்று ரவி கேட்க, “ வேலைக்கு போனா காசு கிடைக்கும். கையில காசு பார்த்ததும் இப்போ இருக்கிற பிள்ளைங்களுக்கு சம்பாதிக்கணும்னு தோணுமே தவிர படிக்கணும்னு நினைக்க மாட்டாங்க. அதனால தான் உன்கிட்டே நானும் வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னேன்.” என்று பதில் தந்தாள் முனியம்மாள்.
மேலும் அவனிடம் “அவசரத்திற்கு கிடைக்காத பணமாக இருந்தாலும் அதன் அவசியத்தை அலட்சியம் செய்யக்கூடாது.” என்றும் சொன்னாள் முனியம்மாள்.
பிற்கால அவசர பணத் தேவைக்கு சேமிப்பு அவசியம்.

No comments:
Post a Comment