Wednesday, January 11, 2023

என் பார்வையில் எ‌ன்னுடைய ராஜா by Veena Shankar

 


என் பார்வையில் என்னுடைய ராஜா 



                             பிறந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் என்னால் கொண்டு வரப்பட்டான் அவன். சிறிய பெட்டியில் நான்கைந்து துணிகளை அடக்கி அதன் மேல் காகிதம் விரித்து அமர வைக்கப்பட்டதும் கத்தி கூப்பாடு போட்டு பின் நித்திரையில் அடங்கிப் போனான். சரியாக ஒரு மணி நேரம் கழித்து தன் பசியை தெரிவிக்க (குளுக்கோஸ்) ஆரஞ்சு மிட்டாய் விற்கும் டப்பாவின் மூடியை கழட்டி, அதில் ஒரு ரப்பர் நிப்பிளை மாட்டி அவனுக்கு பால் கொடுத்த ஞாபகம் என்னை விட்டு விலகவில்லை. இதற்கு முன் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் பில்லரும் இங்க் பில்லரும் கை கொடுக்காத காரணத்தினால் மேல் சொன்ன நடவடிக்கையை எடுத்தேன். இரவில் பசிக்கு குழந்தை போல அழுகை. எனக்கும் அவனுக்கும் என்ன பந்தம் என்று தெரியாமல் விழித்தேன்.  


                     தாய்ப்பால் இல்லாமல் உயிர் பிழைக்காது என்று சொன்னவர்களுக்கிடையே வளர்ந்தான் அவன். ஆனால் அவன் கழிவுகளை வெளியேற்றாத வரை (அதாவது இரண்டு நாட்கள்) நானும் கொஞ்சம் அச்சப்பட்டேன். கொஞ்ச நாட்களிலேயே வீட்டில் உள்ள அனைவரும் அவனுக்கு தாயாகி போனோம். முதன் முதலில் அட்டைப்பெட்டியில் இருந்து தரையில் வைத்த போது அட்டைப்பெட்டியில் எப்படி சுற்றி வந்தானோ அதேபோல செவ்வக வடிவமாய் அவன் நடந்து வந்தது பார்த்து அனைவரும் ரசித்து மகிழ்ந்தோம். பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த பின் மெதுவாக அட்டைப்பெட்டியில் இருந்து தன் மண்டையை வெளியே நீட்டி வெளிவர துடித்து, விழுந்து, எழுந்து, ஓடி என பல அவன் சேஷ்டைகளை குடும்பமாய் ரசித்தோம்.


                               நாம் நடக்கும்போது நம் காலை பிடிப்பதும் துப்பட்டாவை பிடித்து இழுப்பதும் என்று அவன் சேஷ்டைகள் தொடர ஒருநாள் என் வேலை நிமித்தமாக அவன் மேல் ஒரு பிளாஸ்டிக் கூடையை கவிழ்த்து விட்டேன். அது ஒரு நாள் மட்டுமே பலித்தது. மறுநாள் அதனின்று அழகாக வெளியே வந்து தன் பலத்தை நிரூபித்தான். அவனும் கருப்பு, எங்கள் வீட்டு சோபாவும் கருப்பு என்பதால் அவன் அமர்ந்திருப்பது தெரியாமல் நானும் அவன் மீது அமர, சத்தம் போட்டு இறங்கி என்னை முறைத்தும், வீட்டு கதவை அடைக்கும் முன் அதன் இடையில் புகுந்து அடிபட்டுக் கொண்டதும் மாடிப்படியில் ஏறுவேன் என்ற பெயரில் பல்டி அடித்து விழுந்ததும் கண்முன் நிற்கும் காட்சிகள்.


                                     சலவை இயந்திரத்தில் உள்ள துணியை மொட்டை மாடியில் நான் காயவைப்பது வழக்கம். எனவே அவனும் இயந்திரத்தின் சப்தம் நிற்கும் முன்னே முதல் படியில் எனக்காக காத்திருப்பான். யார் அவன்? ஒரு பூனைகுட்டிக்கு இவ்வளவு அறிவா? என்று ஆச்சரியப்பட்டும் உள்ளேன்.


                                      நான் தைத்துக் கொண்டிருக்கும் சமயம் என் காலை பிடிப்பதும் தையல் இயந்திரத்தின் நாடாவை பிடித்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவதும் அவன் சேஷ்டைகளில் அடக்கம். உல்லன் நூல்களையும் கரடி பொம்மைகளையும் வாயில் கவ்வி கொண்டு போகும் அழகும், நாங்கள் அந்த பொம்மையை பிடித்து இழுக்க, அவன் பல்லின் முனைப்பகுதி சிறிது உடைந்ததும் பரிதாபத்துக்குரியது. 


                             புரட்டாசி மாத பெருமாள் கோயிலின் பொங்கலும் நம் வீட்டு பாலும் அவனுக்கு மிகவும் பிடித்தவை. ஒரு நாள் தெரியாத்தனமாக ஒரு சுண்டெலி அவன் கையில் சிக்கிக் கொள்ள வீட்டிற்குள்ளே கொண்டு வந்ததால் நான் அவனை விரட்ட, நான் சுண்டலியை பிடுங்கி சாப்பிடுவேன் என்று நினைத்தானோ என்னவோ? என்னை பார்வையாலும் குரலாலும் மிரட்ட ஒரே ரணகளம் தான். 


                                அன்று ஒரு நாள் திக்கு தெரியாத காட்டில் என் பூனை காணாமல் போனது வருத்தம். எத்தனையோ பூனைகளை வளர்த்தாலும் என்னால் மறக்க முடியாத அவன் தான் என் ராஜா.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...