பொங்கல் பண்டிகை
“பொங்கல்” தமிழ்நாட்டிற்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த பண்டிகை. பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது அன்றைய காலத்தில் வைக்கப்படும் சூரிய பொங்கல் தான். எல்லோர் வீட்டு வாசலிலும் கரும்பு சகிதமாய் மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடுவது வழக்கம். அன்றைய தினமே அடுத்த வருட பொங்கலையும் எதிர்பார்த்து இருப்பதும் குழந்தைகளுக்கு தனி மகிழ்ச்சி தான். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வீட்டில் சூரிய பொங்கல் வைத்து கொண்டாடுவதும் இரு அறைகளைக் கொண்ட வீடானாலும் அதில் சுமார் ஐம்பது பேருக்கு அன்றைய தினம் மதிய உணவு சமைத்து, விருந்தளித்து வந்தனர்.
பொங்கலானது போகி பொங்கல், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களைக் கொண்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு, நான்கு நாட்கள் அரசாங்க விடுமுறையும் விடப்படும். அதே போல கல்லூரியிலும் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் காணும் பொங்கல் அன்று, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவியர் அனைவரும் சேர்ந்து சென்னை, மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க முடிவெடுத்தோம். வீட்டில் அனுமதி பெற்றும் சில பேர் பொய் சொல்லியும் செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அந்த வருடம் கல்லூரியில் காணும் பொங்கல் அன்று விடுமுறை அளிக்காததால் அன்றைய தினம் அனைவரும் மட்டம் போட்டு சினிமாவிற்கு சென்றோம். அந்த நாள் எங்களுடைய நாளாக அமைந்தது.
பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் கல்லூரிக்கு சென்ற போது எங்களுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியை ஒருவர், காணும் பொங்கல் அன்று, நாங்கள் கல்லூரிக்கு வராத காரணத்தை கேட்க, ஒவ்வொருவரும் விதவிதமான பதிலை அளித்தோம். ஆனால் நாங்கள் சொல்வது பொய் என்று தெரிந்தும் எங்களை கடிந்து கொள்ளாமல் சிரித்துக் கொண்டே, உங்களில் பாதி பேர் தியேட்டரின் வாசலில் நிற்பதை நான் என் பஸ் பயணத்தின் போது பார்த்தேன் என்று சொல்ல நாங்கள் அனைவரும் அசடு வழிந்து சிரித்தோம். இதை இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வருகிறது. பண்டிகைகளும் நம் நினைவுகளும் என்றும் பிரிக்க முடியாத ஒன்று.

No comments:
Post a Comment