எதுவும் ரகசியம்
"அம்மா! அம்மா! இன்னைக்கு நாம வெளியே போவோமா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் காமினியின் ஆறு வயது மகன் தர்ஷன். " இல்லப்பா. இன்னைக்கு அம்மாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதனால இன்னொரு நாள் போவோம்." என்று தன் குழந்தையிடம் சொன்னாள். "போம்மா, எப்ப கூப்பிட்டாலும் இதையே சொல்ற. போன வாரம் கேட்டப்ப அடுத்த வாரம் போலாம்னு சொன்னே. இப்ப கேட்டா வேலை இருக்குன்னு சொல்லி என்னை ஏமாத்துற! " என கோபப்பட்டான் தர்ஷன் . "நாளைக்கு கண்டிப்பா உன்னை கூட்டிட்டு போறேன்" என்று காமினி சொல்ல , "எத்தனை மணிக்கு? என்று தர்ஷன் எதிர் கேள்வி கேட்க, " பத்தரை மணிக்கு" என்று காமினி பதில் சொன்னாள். "நாளைக்கு எனக்கு நீ அப்பாயின்மென்ட் கொடுத்து இருக்க. மறுபடியும் ஏமாத்த கூடாது." என்று தர்ஷன் சொல்ல தன் குழந்தையின் கட்டளையை ஆமோதித்தவளாய் ஓகே என்று சொல்லி தற்சமயம் அவன் கோபத்தை ஒத்தி வைக்க முயன்றாள்.
அடுத்த நாள் சரியாக பத்து மணிக்கு எல்லாம் தர்ஷன் கிளம்பி வெளியே போக தயாராக இருந்தான். அங்கொன்றும் இங்கொன்றும் தன் வேலையை முடிக்க பிரயத்தன பட்டாள் காமினி தன் குழந்தையின் கட்டளையை நினைத்தபடியே. சரியாக பத்தரை மணிக்கு அம்மாவும் பிள்ளையும் வீட்டை விட்டு காரில் வெளியே சென்றனர்.
தாங்கள் எங்கே போகிறோம் என்பதை தர்ஷன் முதலிலேயே கேட்டு வைத்திருந்தான். வெளியே செல்வதால் அவனுக்கு மகிழ்ச்சி தான். காமினி கூறிய இடம் நெடுந்தொலைவு என்பதால் அவன் சற்றே கண் அயர்ந்தான். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் காமினி தர்ஷனை எழுப்ப கண்ணை கசக்கி கொண்டு இறங்கியவன், ஆச்சரியப்பட்டான். ஆம் . காமினி தர்ஷனின் அப்பா வீட்டிற்கு ரகசியமாக அவனை அழைத்து வந்திருந்தாள். தர்ஷனை "உள்ளே போ! அப்பாவை பார்த்துவிட்டு வா!" என்று அவனை மட்டும் உள்ளே அனுப்பி தான் வெளியே காத்திருக்க தயாரானாள்.
" நான் கேட்டப்போ வேற இடத்தை தானே சொன்னே! இப்ப இங்கே கூட்டிட்டு வந்திருக்கிறாயே?" என்று கேட்ட தர்ஷனுக்கு , நீ அப்பாவை பார்க்க ஆசையாக இருப்பதாக அப்பாவிடம் நேற்று நீ சொன்ன போது நான் அதை கேட்டேன். அதனால் தான் உன்னை இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன்" என்று சொல்லி, " உன் அப்பாவை போய் பார்! என்று அன்பாக சொல்லி அனுப்பினாள். ஆனால் தர்ஷன் உள்ளே செல்ல மறுத்து தயங்கியபடியே "அம்மா நீ சொல்றது நிஜம் தான். எனக்கு அப்பாவை பார்க்க ஆசையாக இருக்குன்னு சொல்லி நீ கூட்டிட்டு போறதா சொன்ன இடத்திற்கு அப்பாவை அங்கே வரச் சொல்லி நேற்றே சொல்லி விட்டேன். இன்னைக்கு அப்பா இங்கே இருக்க மாட்டாங்க. நான் உள்ளே போனாலும் அப்பாவை பார்க்க முடியாது " என்று சொன்ன தர்ஷனை ஒன்றும் புரியாதவளாய் காமினி பார்த்தாள்.
ரகசியத்தை உடைத்த அவன் மென்று முழுங்கி சொல்லவதை கேட்டதும் காமினியின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறிய சண்டை பெரியதாக மாற காமினியும் அவள் கணவனும் விவாகரத்து பெற, குழந்தை காமினியிடம் வளர வேண்டுமென்றும் தர்ஷன் விரும்பிய போது அவனை அப்பாவிடம் கூட்டு கொண்டு செல்ல வேண்டுமென்றும், அதேபோல் அப்பா விரும்பும் சமயத்தில் தர்ஷனை பார்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் காமினிக்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இருந்தாலும் எப்போதும் காமினியின் கணவன், பொது இடத்தில் வந்து தர்ஷனை சந்திப்பது தான் வழக்கம் என்றாலும் இம்முறை தந்தையைக் காண தானே செல்ல வேண்டும் என்று தர்ஷன் எத்தனித்து, தாங்கள் செல்லும் இடத்தை முன்கூட்டியே தன் அப்பாவிடம் தெரிவித்து இருந்தான்.
"சரி வா! அங்கேயே உன்னை கூட்டிட்டு போறேன்" என்று சொல்லி தான் சொல்லியிருந்த அந்த இடத்திற்கு அவனை அழைத்து செல்ல முடிவெடுத்து காரில் தர்ஷனுடன் பறந்தாள்.
தர்ஷன் ரகசியம் காத்தது காமினிக்கு வியப்பை தந்தாலும், எவ்வளவு வியாக்கியானமாக பேசினாலும் தனி ஆளாக ஒரு பெண் சமூகத்தை எதிர்கொள்வது எவ்வளவு கொடுமையானது என்பதையும் இந்த இரு வருடங்களில் அவள் அறிந்திருந்தாள். தன் சோகத்தை பகிர ஆளில்லாமலும் தோள் சாய இடம் தேடிய காமினியிடம் "அம்மா நீயும் வா" என்று அழைத்த தர்ஷனிடம் சிரிப்பை பதிலாக தந்து , மெல்ல அவனை கூட்டிக்கொண்டு அவள் கணவனையும் நெருங்கினாள்.
அங்கே வார்த்தைகள் பரிமாற தவித்தது. ஆனால் உணர்ச்சிகள் வெளிப்பட்டு இருவர் கண்களும் குளமாயின. தர்ஷனின் கண்களில் மட்டும் வியப்பு மேலிட்டது.
ரகசியமும் அவசியமோ?

No comments:
Post a Comment